6 ஆயிரம் யானைகளைக் காக்க 10 ஆயிரம் சிவில் படையினர்கள்! பிரமித தென்னகோன் கூறுகிறார்

விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த நிலையை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

சிவில் பாதுகாப்பு படையில் சுமார் 33 ஆயிரம் பேர் வரை இருக்கின்றனர். இவர்கள் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்கும் கடமைகளில் இருந்து வருகின்றனர். அவர்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில், இவர்கள் நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் தங்களுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.

மேலும், சிவில் பாதுகாப்பு பிரிவில் 5 ஆயிரம் பேர் யானை வேலியை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று கிராமங்களுக்குள் யானை வராமல் தடுப்பதற்காக மேலும் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், நாட்டில் சுமார் 6 ஆயிரம் யானைகளே இருக்கின்றன. அவற்றை பாதுகாக்க 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றபோதும், யானைகள் கிராமங்களுக்குள் வருவது குறைவடையவில்லை.

இதற்காக வருடாந்தம் 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால், இந்த நடவடிக்கைகளுக்காக புதிய தொழில்நுட்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று விகாரைகளில் 2500 முதல் 3 ஆயிரம் பேர் வரை சேவை செய்து வருகின்றனர். இவர்களுக்காக வருடாந்தம் 2.5 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.

ஆனால், இவர்கள் அங்கு முன்னெடுக்கும் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.

மேலும், நாட்டில் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால், வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் 10 ஆயிரம் பேரே இதில் இணைந்திருக்கின்றனர்.

அதாவது 7 வீதமானவர்களே இருக்கின்றனர். அதனால் வடக்கு, கிழக்கில் இருக்கும் இளைஞர்களை தேசிய மாணவர் படையில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.