கடன்களை மறுசீரமைக்காமல் முன்னேற்றமடையவே முடியாது! ஜதார்த்ததத்தை உணர்ந்தார் பந்துல

தேசிய மற்றும் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்காமல்  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடை முடியாது. நாட்டுக்காகவே  பிரபல்யமடையாத தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது.

இது அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாலம். வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில்  அரசியல் கட்சிகள் பாரம்பரிய கொள்கைகளில் இருந்து விடுபடாமல்  செயற்பட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது  என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குப்படுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதாரப் பாதிப்புக்கு ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் ஏதாவதொரு வழிமுறையில் பொறுப்புக் கூற வேண்டும்.அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதால் தற்போது பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து அதன் பொறுப்பு ஓர் அரசாங்கத்தின் மீது மாத்திரம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசமுறை கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பின்னணியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு துறை அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சிப்பதால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை ஒருபோதும் தொடர முடியாது.

நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமாயின் தேசிய மற்றும் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.கடன்களை இந்த வழிமுறையில் தான் மறுசீரமைக்க வேண்டும் என  எம்மால் குறிப்பிட முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தேசிய மற்றும் அரசமுறை கடன்களை மறுசீரமைக்காமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என்பதே உண்மை.பொருளாதார மீட்சிக்கான சிறந்த கொள்கை இல்லாமல் மக்கள் ஏமாற்றி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றலாம், ஆனால் அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

நாட்டுக்காகவே அரசாங்கம் பிரபல்யமடையாத தீர்மானங்களை எடுத்துள்ளது.இது அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில்  அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது. மின்னுற்பத்தி கட்டமைப்பின் கொள்கை தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. செலவுக்கு அமைய வருமானம் ஈட்டிக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் அரசியல்வாதிகள் பாரம்பரியமான கொள்கைகளில் இருந்து விடுபட வேண்டும். நாட்டுக்காக ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் தமது கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.