தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசு தலையிடாது அரசியல்வாதிகள் பொறுப்பற்ற கருத்துகளைத் தவிர்க்குக!  ரஞ்சித் சியம்பலாபிட்டிய காட்டம்

அரசாங்கத்தின் பிரதான 10 நண்பர்கள் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றமை அடிப்படையற்றது.

தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது. ஆகவே பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பதை சிரேஷ்ட அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என  பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குப்படுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம். கடன் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது. தேசிய மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பணிகள் பொறுப்புடன் மேற்கொள்ளப்படும்.

தேசிய முறை கடன் மறுசீரமைப்பின் போது அரசாங்கத்தின் நண்பர்கள் பெற்றுக்கொண்ட வங்கி கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ள கருத்து பாரதூரமானது. வரி அதிகரிப்பால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான முறையற்ற கருத்துக்கள் சமூக மட்டத்தில் தேவையற்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்ட கருத்து தொடர்பில் சகல அரச வங்கிகளின் பிரதானிகளிடமும்,திறைசேரியின் செயலாளரிடமும்  வினவினேன். தனிநபர்கள் பெற்றுக்கொண்ட வங்கி கடன்களை மறுசீரமைக்கவோ அல்லது கடன் மறுசீரமைப்பு ஊடாக அவர்களுக்கு நிவாரணம்,சலுகை வழங்கவோ எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். இரு பிரதான அரச வங்கிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

அரசாங்கத்தின் 10 நண்பர்கள் என்று குறிப்பிடும் நபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களை மறுசீரமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என்பதை தெளிவுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  சட்டவிரோதமான முறையில் 3 கிலோகிராம் தங்கம், 96 ஸ்மார்ட் தொலைபேசி ஆகியவற்றை கொண்டு வந்து விமான சுங்கத் தரப்பினரிடம் அகப்பட்டார்.தான் செய்தது தவறு என்பதை அவர் ஏற்றுக்கொண்டு சுங்க பிரிவு சட்டத்தின் பிரகாரம் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாகியுள்ளார்.

தான் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த போது அரசாங்கம் தனக்கு உதவவில்லை,அதனால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன் என்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.இது அரசாங்கத்துக்கான ஒரு நற்சான்றிதழாகும்.தவறான செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டிய தேவை எமக்கு கிடையாது.எதிர்வரும் நாள்களில்  அலி சப்ரி ரஹீம் எதிர்க்கட்சி பக்கம் செல்லலாம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.