நாடளாவிய ரீதியில் பிரசாரத்தில் மக்கள்புரட்சிக்காக ஈடுபடுவேன்!  பொன்சேகா சூளுரை

ஊழல் அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தை (அரகலய) கடுமையாகச் சாடுகிறார்கள். போராட்டத்தால் தான் ராஜபக்ஷர்களிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட்டு பாரிய மாற்றம் அரசமைப்பின் ஊடாக ஏற்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளமை கவலைக்குரியது. சிறந்த அரசியல் கலாசாரத்துக்காக மக்கள் புரட்சி தோற்றம் பெற வேண்டும். அதற்காக நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை முன்னெடுப்பேன்.

பௌத்தத்துக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர்  பிரசாரம் செய்வதற்கு சிங்கள மக்கள் ஏமாறக் கூடாது. வரலாற்றில் ஏமாற்றமடைந்தது போதும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குப்படுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடு பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டது. அதனால் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசை யுகம் முடிவடைந்து விட்டது என அரசாங்கம் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது. மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைக்  குறைத்துக் கொண்டுள்ளார்கள். இதனால் வரிசை யுகம் முடிவடைந்துள்ளது. சாதாரண மக்கள் எவரும் சந்தோசமாக இல்லை, பிரச்சினைகளுடன் வாழ்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரம் நாளாந்த ஒடுக்கப்பட்ட நிலைக்குச் செல்கிறது. பொருளாதாரப் பாதிப்பால் தொழில் இன்மை தீவிரமடைந்துள்ளது. நடுத்தர மக்கள் பெறும் சம்பளத்துக்கும்,வாழ்க்கை செலவுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் வெளிநாட்டு ஆடை தொழில் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கருத்துரைக்கிறார். பொருளாதார முன்னேற்றம் மத்திய வங்கி, நிதியமைச்சு ஆகியவற்றை வரையறுத்ததாகக் காணப்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்கள் பெறவில்லை.

மின் கட்டணத்தை அதிகரிக்க ஜனக ரத்நாயக்க எதிர்ப்புத் தெரிவித்ததால் அரசாங்கம் அவரை எதிரியாகப் பார்த்தது. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மக்களுக்காகக் குரல் கொடுத்த காரணிகளை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எமக்கு இணங்க செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். ஊழல் அரசியல் மீண்டும் தலைதூக்கியுள்ளமை கவலைக்குரியது.

அரசாங்கத்தின் தேவைகளுக்காகவே புதிய சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இவை நாட்டு மக்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டில் போராட்டம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.ஊழல் அரசியல்வாதிகளே போராட்டத்தை (அரகலய)கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

போராட்டத்தின் ஊடாகவே நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டு மக்களை ஏமாற்றி அடுத்த முறை ஆட்சிக்கு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் செயற்படுகிறார். காலி முகத்திடல் தொடர்பில் புத்தகம் எழுதி மக்களைத் தவறாக வழிநடத்த முடியாது. ஊழல் அரசியல்வாதிகளை  இல்லாதொழித்து சிறந்த அரசியல் கலாசாரத்துக்காக  மக்கள் புரட்சி தோற்றம் பெற வேண்டும். அதற்காக நான் நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை முன்னெடுப்பேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.