கிழக்கு கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்படும் அநீதியைத் தடுத்து நிறுத்துக! கிழக்கு ஆளுநரிடம் இம்ரான் எம்.பி. கோரிக்கை

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளது. அதனை உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு –

கிழக்கு மாகாண ஆளுநராக சமீபத்தில் கடமையேற்றுக்கொண்ட தாங்கள் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், குறிப்பாக, கல்வி விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி வருவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளதாக நான் உணர்கிறேன். இது தொடர்பான தகவல்களைத் தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எனவே, இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கல்வி அமைச்சின் 01ஃ2016 சுற்றறிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் 2,383 ஆசிரியர்கள்  பற்றாக்குறை நிலவுகிறது.

இதனை விட பின்வருவனவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் 637 ஆசிரியர்கள் பதில் கடமை புரியும் அதிபர்களாக செயற்படுகின்றனர். எனினும், கணக்கெடுப்பில் இவர்கள் ஆசிரியர்களாகக் கருதப்படுகின்றனர்.

பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பதில் ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள் போன்ற பதவிகளில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களும் ஆசிரியர்களாகவே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சம்பளமற்ற விடுமுறையில் 100 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்றுள்ளனர். இவர்களும் கிழக்கு மாகாண ஆசிரியர் பட்டியலில் உள்ளனர்.

2016 இற்குப் பின்னர் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் பல புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் தரம் 11 வரை தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும், தற்போது அமுலில் உள்ள ஆளணி சுற்றறிக்கைக்குள் இவற்றுக்குத் தேவையான ஆசிரியர் விவரம் உள்வாங்கப்படவில்லை.

அதன்படி கணக்கிட்டால், மேலே குறிப்பிட்டவாறு 2,383 ஐ விட இன்னும் 1,300 இற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளன.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் பட்டியலின்படி, கிழக்கு மாகாணத்துக்கு 512 பேரின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என அறிய முடிகிறது. இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர். இதிலுள்ள அநீதியை தங்கள் முன் வைக்கிறேன்.

கிழக்குக்கு வந்துள்ள பெயர்ப் பட்டியலின்படி, எந்தவொரு விஞ்ஞான ஆசிரியரும் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்படவில்லை. எனினும், திருகோணமலை கல்வி வலயத்தில் 18 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 10 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 22 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 2 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 52 விஞ்ஞான ஆசிரியர்களுக்கு வெற்றிடம் உள்ளது.

அதேபோல தமிழ்மொழி பாடத்துக்கு திருகோணமலை கல்வி வலயத்தில் 31  ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 31 ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 9 ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 6 ஆசிரியர்களுக்கும், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் ஓர் ஆசிரியருக்கும் என வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 78 தமிழ் பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் பாட ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று இன்னும் பல பாடங்களுக்குப் பல பாடசாலைகளில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ள  நிலையில், கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்படவுள்ளமை மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும்.

7 வருடங்களுக்கு முன்னைய சுற்றறிக்கையின்படியான கணக்கெடுப்பை மையமாக வைத்து தற்போது நடவடிக்கை எடுப்பது கல்வித்துறை எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் கல்வித்துறை மூலம் நாட்டின் மறுமலர்ச்சியை ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு பாரிய தடையாக இருக்கும் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

எனவே, இவ்விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட சகல ஆசிரியர்களையும், கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சார்பாக தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.