போலி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை!  மனுஷ நாணயக்கார எச்சரிக்கை

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளன எனப் போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமையவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் 80 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்கியுள்ளன.

எனினும் சட்ட திருத்தங்களின் ஊடாக ஒரேயொரு ஊழியரைக் கொண்டிருந்தாலும், அந்த நிறுவனமும் தமது தொழிலாளியை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியில் உள்வாங்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும்.

மாறாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றைக் குறைப்பதோ அல்லது அவற்றை இரத்து செய்வதோ எமது நோக்கமல்ல.

ஓய்வு பெற்றதன் பின்னர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத்துக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தொழிலைப் பாதுகாப்பதற்குப் பதிலாகத் தொழில் வாய்ப்புக்களைப் பாதுகாப்பதே எமது இலக்காகும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தற்போதும் முறையான காப்புறுதித் திட்டங்கள் இல்லை. எனவே அரச உத்தியோகத்தர்களைப் போன்றே தனியார் துறையினருக்கும், மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

தூய்மைப்படுத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் , கட்டட நிர்மாணப்பணியாளர்கள் , வீட்டுப் பணிப்பெண்கள் என அடிமட்டத்திலிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்குவதற்காகவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனினும் இவ்வாறான சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்களின் சலுகைகள் , உரிமைகள் முடக்கப்படவுள்ளன என சிலர் போலியான செய்திகளையும் , தகவல்களையும் வெளியிடுகின்றனர்.

அவ்வாறானவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்