வடக்கும் மலையகமும் ஒன்றாகவே யணிக்க வேண்டிய தேவையுள்ளது! அருட்தந்தை சக்திவேல் இடித்துரைப்பு

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள் இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் அமைப்பு சார்பாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளோடும் சுயநிர்ணய உரிமை பொருத்தமாக வாழ்வதற்கான சூழ்நிலை போன்றவை உருவாகவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தொடர்ந்தும் நான் பயணித்துக்கொண்டிருப்பவன். இதற்காகப் போராடிய உயிர்த் தியாகம் செய்த தமிழ் அரசியல் கைதிகளோடு தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றேன். அந்த உணர்வோடும் உரிமையோடும் மலையகம் சம்பந்தமாக உரையாற்றவுள்ளேன்.

வடக்கு, கிழக்கு மக்கள் ஒருபோதும் போராட்டத்தை நிறுத்தவில்லை. வீதிகளில் நின்று போராடுகின்றனர். போராட்டம் உணர்வுபூர்வமானது. வடக்கு, கிழக்கு மக்களின் தற்போதைய அன்றாடப் பேச்சாக இனவழிப்பு இனப்படுகொலை சர்வதேச நீதி, குற்றவியல் நீதிமன்றம் போன்றன தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இது வடக்கு, கிழக்குக்கு மட்டும் பொதுவான சொல்லல்ல. மலையகத்துக்கும் பொதுவான சொல். மலையக மக்களும் மிக நீண்ட காலமாக அமைதியான முறையிலே இன அழிப்பிற்கு உட்பட்டுள்ளதுடன் தற்போதும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

அது போல மலையக மக்கள் இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

1964 ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமும் கூட இனப்படுகொலை தான். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை கண்முன்னே இழுத்துக்கொண்டு சென்று தகப்பன் இந்தியாவில் தாய் இலங்கையில் என பிளவுபடுத்தப்பட்ட வேதனை இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

அதே போல் 1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைத்த பின்னர் இவர்களின் வாக்குரிமையைக் கண்டு பயத்துவிட்டனர். 1937 ஆம் ஆண்டு புதிய சட்டமொன்றை கொண்டு வந்து அரசியல் ரீதியாக இனவழிப்பை மேற்கொண்டனர்.

அதன் பின் தொழிளாளர்களின் போராட்டம் எழுச்சியைக் கண்டு பயந்து அவர்களின் வாக்குரிமையைப் பறித்து விட்டனர். இதுவும் ஓர் இன அழிப்பு தான். அரசியல் ரீதியாகவும் ; பொருளாதார ரீதியாகவும் ; அபிவிருத்தி ரீதியாகவும் மக்கள் ஒடுக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

தற்போது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்விகற்றுக்கொண்டிருப்பதானது வளர்ச்சியாகக் காணப்பட்டாலும் அந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியடைவதில்லை. குறித்த பிரதேசங்களை அபிவிருத்தியடைய விடாது பேரினவாதம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

200 ஆண்டு காலமாக தொடர்ந்தும் ஒரே பிரதேசத்தில் உயிர் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்கள் வசிக்கும் நிலம் அவர்களுக்கு சொந்தமில்லாமல் காணப்பட்டாலும் 1940 ஆம் ஆண்டிலிருந்து புதிய புதிய குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. தொடர்ந்தும் ஒரே இடத்தில் வாழும் மக்களுக்கு நிலம் சொந்தமில்லை என்றால் அதுவும் ஒருவகையில் இனவழிப்புத் தான்.

1841 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது 70000 பேர் இறந்திருக்கின்றார்கள். அவர்களுடைய கணக்கில் இறந்திருந்தாலும் எம்முடைய பார்வையில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பிரயாண வசதிகள், போதுமான உணவு வசதி உட்பட சுகாதார வசதிகள் வழங்கப்படவில்லை என்றால் இதைக் கொலை என்று தான் கூற முடியும். இந்தக் கொலையை பிரிட்டிஸ் அரசாங்கமே செய்தபடியால் அவர்களிடம் நீதி கேட்பதுடன் நட்ட ஈட்டையும் கோர வேண்டும். தொழிளாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் திட்டத்தைத் தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

மக்களுக்கு வழங்கப்படும் 7 பேர்ஜ் காணி எவ்வாறு போதுமானது. 31000 ஏக்கர் காணி வழங்கப்படவுள்தாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். இப்போது அது கொடுக்க மறுக்கின்றார்கள் என்றால் மலையக மக்கள் இப் பூமியில் வாழக்கூடாது என்பதற்காக பேரினவாதம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நாங்கள் முள்ளிவாய்க்காலில் பிணங்களையும் எலும்புக்கூடுகளையும் கடந்து வந்த வரலாறுண்டு.

1890ஆம் ஆண்டளவில் கோப்பித்தோட்டம் முற்றாக அழிவடைந்த வேளையில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கையிலே பணமில்லை. இதனால் பட்டினியில் விழுந்து சாகின்றார்கள். இறந்தவர்கள் ஆங்காங்கே வீசி எறியப்பட்டார்கள். இவ்வாறான சம்பவங்களையெல்லாம் இனவழிப்பு என கூற முடியும்.

எனவே முதலாளித்துவம் தன்னுடைய பொருளாதாரத்துக்காக இனவழிப்பு மேற்கொண்டிருக்கின்றது. தம்முடைய அரசியலைக் காப்பாற்றுவதற்காகவும் பேரினவாத அரசியலைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இன்றுவரை இனவழிப்பை மேற்கொள்கின்றனர்.

1960 களில் மலையகத் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழரசுக்கட்சி மும்மொழிவுகளை முன்வைத்தது. இன்றும் மலையக அரசியல்வாதிகள் மக்களுக்கான அரசியலைச் செய்யாமல் அயல் நாடுகளுகளுக்காகவும் மேற்கு நாடுகளுக்குமாக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இனவழிப்பு இனப்படுகொலை என்ற சொற்களுக்கு மத்தியிலே வடக்கும் மலையகமும் ஒன்றுசேர்ந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டிய தேவையுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்