ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த குளிர்ச்சிப் பெருவிழா!

( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்தின்
வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு கடந்த திங்கட்கிழமை
மாலை கடல் நீர் எடுத்து,  கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது.

முன்னதாக ஆலயத்தில் தர்மகத்தாக்கள், கப்புகனார்கள் நிருவாகிகள் சேர்ந்து
விசேட பூஜை வழிபாடு இடம்பெற்று, பாரம்பரிய மரபு முறைப்படி  பறைமேளம்
அடித்து கடற்கரைக்கு சென்று  அங்கு விசேட பூஜை இடம் பெற்று கடல்தீர்த்தம்
எடுக்கப்பட்டது.

அங்கிருந்து நேராக வீதி முழுவதும்  நடைபாவாடை விரிக்கப்பட்டு, கல்யாண
கால் (பூவரசு மரக்கிளை) முறித்து எடுக்கப்பட்டு,  பக்தர்களால்
ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆலயத்தில் அதற்கான சடங்குகளை செய்து உரிய வேளையிலே குரவை ஒலிக்கு
மத்தியில் கல்யாணக்கால் சிறப்பாக நடப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் கூறைச் சாறிகளை அம்மனின் கல்யாண காலுக்கு சாத்தி
வழிபட்டார்கள். மேலும் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, நைவேத்தியம் வைத்து
வழிபட்டார்கள்.

ஆலய தர்மகத்தாக்களான  பரமலிங்கம் இராஜமோகன் , இரா.குணசிங்கம், சா.கங்காதரன் தலைமையில் முதல் நாள் சடங்கு சிறப்பாக நடைபெற்றது.

திங்கட்கிழமை ஆரம்பமாகி இந்தச் சடங்கு  தொடர்ந்து 08 தினங்கள் நடைபெற்று ஜுன் மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருக்குளிர்த்தி
பாடலுடன் நிறைவடையும்.

30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம்
பாடலும் இடம்பெறும். தொடர்ந்து புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை
பகல் ஒரு மணிக்கு பூசையும் மாலை 7 மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.

05 ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம்
நடைபெறும். மறுநாள் செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 12 ஆம் திகதி மாலை 7 மணிக்கு இடம்பெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்