மலையக மக்கள் முன்னணியின் பிரதிதலைவர் லோரன்ஸ் மரணம்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகவீனமடைந்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

சமகால மலையக அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வறிஞருமான அ.லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

அமரர் லோரன்ஸ் அவர்கள் தனது ஆரம்பகாலக் கல்வியைத் தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையிலும் க.பொ.த. சாதாரண தரத்தை தலவாக்கலை சென்பெற்றிக்ஸ் கல்லூரியிலும் பட்டப்படிப்பை கொழும்புப் பல்கலைகழகத்திலும் மேற்கொண்டிருந்தார்.

கல்லூரி காலத்திலேயே தோழர் என்.சண்முகதான் தலைமையில் இயங்கிய கம்மியுனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டு இயங்கியவர்.

அதன் பின் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து சண்முகதானிடமிருந்து விலகி தோழர் காமினியப்பா மற்றும் கௌரிகாந்தன் தலைமையில் இயங்கிய கிழைக்காற்று இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடந்த 1974 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக சிறை சென்றார்.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த இலங்கை ஆசிரிய சங்க மாநாட்டில் பி. ஏ காதர் மற்றும் கௌரிகாந்தன் ஆகியோருடன் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் மலையக தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தனியான தேசிய இனம் என்ற கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் காதரோடு இணைந்து செயற்பட்டார். காதர் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரோடு மலையக வெகுஜன இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார்.

1980 ஆண்டில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில்  இளைஞர் சேவை அலுவலராக இணைந்து நுவரெலியா மாவட்ட இளைஞர் சேவை அலுவலராக சுமார் 15 வருடங்கள் அரசாங்க சேவையிலும் கடமையாற்றினார்.

1980 ஆம் ஆண்டில் மலையக வெகுஜன இயக்கத்தின் வெளியீடான ‘விடுவு’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். யுவிடெப் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் ( மலையக தொழிலாளர் தகவல் அபிவிருத்தி  நிறுவனம்)  தலைவராகவும் பிரதான இணைப்பாளராகவும் செயற்பட்டார்.

கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயற்படுவதோடு அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கட்சியின் உப தலைவராக இருந்த தர்மலிங்கம் காலமாகிய பின்  அவரின் இடத்திற்கு உப தலைவராக நியமிக்கப்பட்டு  தற்போதும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராக செயற்பட்டு வந்தார்.

பல்பரிமான அனுபவங்களை கொண்ட லொரன்ஸ் இனப்பிரச்சினை, மனித உரிமைகள் தொடர்பாக தாய்லாந்து, ஜேர்மன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் நடைபெற்ற செயலமர்வுகளில் மலையக தமிழ் மக்கள் சார்பாக பங்கு பற்றியுள்ளதோடு அரசியல் தீர்வில் மலையக தமிழ் மக்கள் பிரச்சனையை வலியுறுத்தி பல ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்