ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின் பின்பே படுகொலையானார்! அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசன் 2021 ஆம் ஆண்டு அச்சுறுத்தப்பட்டார் என சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் மட்டு ஊடக அமையம் இணைந்து படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 19 ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் மற்றும் அருட்தந்தை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிந்து சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

விடுதலைப்புலிகள் பிரிந்ததற்கு பின்னர் முதலாவதாக  வேட்டுவைக்கப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் என பார்கின்றோம். 22 வருடங்களாக வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த அவரை இழந்திருக்கின்றோம்.

2000 ஆயிரம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாக 2001 ஆம் ஆண்டு வெற்றியளித்தது.

இருந்தபோதும் 2009  விடுதலைப் புலிகள் போராட்டம் மௌனித்ததற்கு பிற்பாடு இன்று நாங்கள் பார்க்கின்றபோது ஒரு தலைவரை ஒற்றைக் கதிரையில் பார்த்த நாங்கள் இப்போது 10 தலைவர்களை 10 கதிரையில் இன்று பார்க்கின்றதுடன் யார் தலைவர் என யாருக்கும் தெரியாத நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் 19 வருடம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்காக பல்வேறு தரப்பினர் போராடினாலும் கூட ஊடகவியலாளர்கள் பேனா முனையில் போராடியதன் நிமிர்த்தமாக பேரினவாதம் திட்டமிட்டு 46 ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

பிரேமதாஸா தொடக்கம் இப்போது உள்ள ஜனாதிபதி வரையில் ஜனாதிபதிகள் மாறியிருக்கலாம் ஆட்சி மாறியிருக்கலாம். ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி இதுவரை கிடைக்காத சூழ்நிலையில் இந்த 19 ஆவது நினைவேந்தலைச் செய்துகொண்டிருக்கின்றோம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஸ்ரீpலங்கா அரசாங்கம் நீதி வழங்க மாட்டார்கள.; எனவே சர்வதேச மட்டத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறிவருகின்றோம்.

வடக்கு, கிழக்கில் பல ஊடகவியலாளர்கள் துணிந்து பல விடயங்களை வெளிக் கொண்டுவந்தாலும் கூட அவர்களுக்கும் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றதுடன் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என்ற அச்சுறுத்தலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, சமாதானம் என்று சொல்லுகின்றவர்கள் நாட்டில் யுத்தமில்லை என்று சொல்லுபவர்கள் எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் மௌனித்தாலும் கூட தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வு வரும் வரை நாங்கள் அச்சுறுத்தப்பட்ட ஓர் இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழல் வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இதனைக் கணக்கில் எடுத்து வடக்கு, கிழக்கு இணைந்து சயநிர்ணய உரிமையிலான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்