கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா 4 இல் ரெரன்டோவில்!

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் எனக்கருதும்
ஒருவருக்கு,’இயல் விருது’ எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது கனடா
தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பால் வழங்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதை
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இலக்கிய படைப்பாளியும் தற்போது
ஆஸ்திரேலியாவில் வதிபவருமான எழுத்தாளர் லெ. முருகபூபதியும், இந்தியாவில்
பெங்களூரில் வதியும் பிரபல எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் பாவண்ணனும்
பெறுகிறார்கள்.

இயல்விருது விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா ரொரன்டோ –
ஸ்காபரோவில் எஸ்டேட் விருந்து மற்றும் நிகழ்வு மையம் மண்டபத்தில்
நடைபெறும்.

இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியியலாளருக்கோ, நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த
தமிழ் தொண்டாற்றியதாகக் கருதுபவர்களுக்கோ 2001 ஆம் ஆண்டு முதல்
அளிக்கப்படுகிறது.

இதுவரையில் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக கனடா தமிழ் இலக்கியத்
தோட்டத்தின் இயல் விருது பெற்றவர்கள்:
இந்தியாவிலிருந்து சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், அம்பை, எஸ்.
ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், கோவை ஞானி,
ஜெயமோகன், ஐராவதம் மகாதேவன், என். சுகுமாரன், வண்ணதாசன், இமையம்,
சு. வெங்கடேசன், இரா. வெங்கடாசலபதி.

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஜோர்ஜ் எல். ஹார்ட்,

இலங்கையிலிருந்து கே. கணேஷ், டொமினிக் ஜீவா, இ.மயூரநாதன்,

இங்கிலாந்திலிருந்து தாஸீஸியஸ், பத்மநாப ஐயர், லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் ,
ஆஸ்திரேலியாவிலிருந்து எஸ். பொன்னுத்துரை ஆகியோர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இயல்விருது விழாவுக்கு பிரதம
விருந்தினராக தமிழ் இலக்கிய ஆர்வலர் அறிஞர் தோமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மாவும், பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியையுமான கிம் எச்லினும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை புனைவு எழுத்துக்கான விருது ‘மன்னார் பொழுதுகள்’ நாவல் எழுதிய
வேல்முருகன் இளங்கோவுக்கும் அபுனைவு விருதுக்கு ‘;மூவந்தியில் சூலுறும் மர்மம்’
என்ற படைப்புக்காக சாம்ராஜுக்கும்,கவிதைக்கான விருது கவிஞர் சுகிர்தராணிக்கும், இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கும் இலக்கியச் சாதனைக்கான விருது கனடாவிலிருந்து நீண்டகாலமாக பதிவுகள் இணைய இதழை நடத்திவரும் வ.ந.கிரிதரனுக்கும் வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் முருகபூபதியின் சிறுகதை தொகுதிகள் ஏழும், புதின, சிறுவர், பயண
இலக்கியம் மூன்றும், கடித இலக்கியம், நேர்காணல் தொகுதி இரண்டும், கட்டுரை
தொகுதிகள் பதினேழும் இதுவரையில் வெளிவந்துள்ளன.

இரண்டு தடவைகள் இலங்கையில் தேசிய சாகித்திய விருது பெற்றிருக்கும் முருகபூபதி,
ஆஸ்திரேலியா தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான விருதும், விக்ரோரியா மாநில
பல்தேசிய கலாசார விருதும் பெற்றிருப்பவர். முன்னர் வீரகேசரியில் துணை
ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

எழுத்தாளர் பாவண்ணனின் கவிதைத் தொகுதிகள் மூன்றும், சிறுகதை தொகுதிகள்
21 உம் , நாவல்கள் மூன்றும், குறுநாவல்கள் மூன்றும், கட்டுரை தொகுப்புகள் 34 ,
சிறுவர் இலக்கியத் தொகுப்புகள் ஒன்பதும், மொழிபெயர்ப்புகள் (கன்னடத்திலிருந்து)
24 நூல்களும், (ஆங்கிலத்திலிருந்து) ஐந்து நூல்களும் (எல்லாமாக நூறு நூல்கள் )
இதுவரை வெளியாகியுள்ளன.

பாவண்ணன், ஏற்கனவே புதுச்சேரி அரசினதும், தமிழ்நாடு இலக்கியச் சிந்தனை அமைப்பு மற்றும் கதா அமைப்பு, இந்திய சாகித்திய அகாதெமி விருது, தமிழக அரசின் விருது, இந்திய அமெரிக்க வாசகர் வாழ்நாள் சாதனை விருது, விளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் விருது உட்பட பல விருதுகள் பெற்றிருப்பவர்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மற்றும் இதழாசிரியர்கள் பரிபாலன
சபை உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
செயலாளராக பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் இயங்கி வருகின்றார்.

கொவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்த வருடாந்த இயல்விருது விழா மெய்நிகரில்
நடந்தது. இம்முறை மண்டபத்தில் இந்த விழா ஞாயிறன்று நடைபெற
ஏற்பாடாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.