50 பயணிகளுடன் சாரதி இன்றி 50 மீற்றர் சென்ற பஸ்: சாதுரியமாக விபத்தை தவிர்த்த கோப்ரலுக்கு பாராட்டு!

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில்  பயணித்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக  கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார்.

இலங்கையின் நான்காவது  காலாட்படையின் கோப்ரல் கே.எம்.பி.ஆர்.கே.எல் கருணாரத்ன என்பவரே இவ்வாறு  பாராட்டைப் பெற்றவராவார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின்   ஆலோசனையின் பேரில்,  குறித்த கோப்ரல் வியாழக்கிழமை இராணுவத் தளபதியின் அலுவலகத்துக்கு  அழைக்கப்பட்டு, அவரது துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டி இராணுவத் தளபதியால் அவருக்கு  பாராட்டுச் சின்னம்  வழங்கப்பட்டது.

உடுதும்பர பிரதேசத்திலிருந்து  குறித்த பஸ் பயணித்துக்  கொண்டிருந்த நிலையில்,   ஒரு  வளைவில்  திரும்பும் போது சாரதியின் ஆசனத்திலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டதில், பஸ்  சாரதியின்றி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

இந்நிலையில்,  அந்த பஸ்ஸில் பயணித்த   இராணுவ கோப்ரல் துரிதமாக செயற்பட்டு  சாரதி இருக்கைக்குச்  சென்று பஸ்ஸை பெரும் பிரயத்தனத்தின் பின்னர்  நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்