நாடாளுமன்ற உறுப்பினர்மீது நீண்டிருக்கும் அரச புலனாய்வாளர்களின் ஆயுதமுனைகள்! சிறிதரன் எம்.பி. காட்டம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

இந்த நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல், சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இந்தச் சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.