பிளாஸ்ரிக் மயமாகிறது மனித உடல் விழித்துக் கொள்ளாதுவிடில் விபரீதம்! சூழல் தின அறிக்கையில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது.

இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் பிளாஸ்ரிக் நுண்துகள்கள் மனித உடலைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன என மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பலநூறு இரசாயனங்களின் சேர்க்கையால் ஆன பிளாஸ்ரிக் நுண்துகள்கள் தொடர்பாக விழித்துக் கொள்ளாவிடில் சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய்கள் வரை பல்வேறு விபரீதங்களை எதிர் கொள்ள நேரிடும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் திகதி இன்று (திங்கட்கிழமை) உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பிளாஸ்ரிக் மனுக்குலத்துக்குப் பெறுமதியான பல பயன்களைத் தந்து கொண்டிருந்தபோதும், கூடவே சீர்செய்ய முடியாத பல மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இயற்கைப் பொருள்கள் யாவும் காலவோட்டத்தில் உக்கிக் கரைந்துபோக, செயற்கைப் பிளாஸ்ரிக் மட்டும் அதன் பிரம்மாவான மனிதனிடம் சாகாவரம் வாங்கி வந்துள்ளது. காலன் இல்லாததால் கழிவுகளாக மலைபோலக் குவிந்து சூழலுக்குத் தாங்கொணாத உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று நிலம், நீர், காற்று என்று இயற்கையின் மேனி முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளின் கோரப் பற்கள் ஆழப்பதிந்துள்ளன.

பிளாஸ்ரிக் கழிவுகள் நிலத்தைப் போர்த்தி மண்ணினுள் மழைநீர் இறங்குவதை அனுமதிக்காததோடு காற்றுப்புகுவதையும் தடை செய்கிறது. பிளாஸ்ரிக் கழிவுகளை உயிரினங்கள் உணவோடு சேர்த்தும், உணவென நினைத்தும் விழுங்குவதால் தரையில் யானைகள் முதல் கடலில் மீன்கள் வரை பல மில்லியன் கணக்கான உயிர்கள் ஆண்டுதோறும் அற்ப ஆயுளில் பலியாகி வருகின்றன.

பிளாஸ்ரிக் கழிவுகளை எரிப்பதால் வெளிவரும் கொடும் டையொக்சின் வாயு மனிதர்களை மலடாக்கி வருகிறது. தற்போது பிளாஸ்ரிக் கழிவுகள் நுண்துகள்களாக மனித உடலினுள்ளும் தேங்க ஆரம்பித்துள்ளன.

பிளாஸ்ரிக்கின் நல்லாட்சியைவிடச் சமநிலையைச் சீர்குலைத்து இயற்கையைச் சாகடிக்கும் அதன் வல்லாட்சியே மேலோங்கியுள்ளது. இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல்தினக் கவனக்குவிப்பாகப் ‘பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. முற்றுகையிட்டிருக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளில் இருந்து இயற்கையையும் எம்மையையும் உடனடியாக மீட்டெடுப்பது இலேசானதொன்றல்ல. எனினும், அதன் தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவல்ல வியூகங்களையேனும் வகுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

தேவையற்ற பிளாஸ்ரிக் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பது எம்முன்னால் உள்ள முதற்தெரிவாகும். இயன்றவரை நீண்டகாலம் பயன்படுத்துவது, கழிக்க முன்னர் இன்னொருமுறை பயன்படுமா என்று சிந்திப்பது, கழிவுகளில் இருந்து பிளாஸ்ரிக்கைப் பிரித்தெடுப்பது போன்ற கழிவு மேலாண்மைகளையும் கையில் எடுக்க வேண்டும். கூடவே, ஒரு நாள் பயன்படுத்தித் தூக்கி வீசும் பிளாஸ்ரிக்குக்கு மாற்றாகக் கடதாசி, துணி, இலைகள் போன்றவற்றினாலான இயற்கைப் பொருள்களுக்குத் தாமதமின்றித் திரும்பவேண்டும். தவறின் பிளாஸ்ரிக் அதனைப் பிரசவித்த மனுக்குலத்தையே விரைவில் தின்று செரித்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.