தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது! சிவகுமாரன் நினைவேந்தலில் நிரோஷ் உணர்வுப் பேச்சு

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன். சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப் பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராயில் அமைந்துள்ள பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் முன்னர் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நிலையில் மீள பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பொன். சிவகுமாரனின் அஞ்சலி செலுத்திய பின் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவகுமாரன் அவர்களது தியாகம் எமது விடுதலைப்போராட்டப் பாதையில் முக்கியமானது. தமிழ் மாணவர்களுக்கு அரசால் இழைக்கப்பட்ட தரப்படுத்தல் அநீதி மற்றும் ஏனைய ஒடுக்குமுறைகள் மற்றும் தேசத்துரோகங்களுக்கு எதிராக மாணவர் சக்தியாகத் துணிந்து போராடியவர்.

பொன். சிவகுமாரனின் தியாகம் என்பது தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதியுடனான போராட்டமாகும். அவருக்கான அஞ்சலி என்பது உறுதியான தமிழ்த் தேசிய பயணப்பாதையுடனேயே அமைய வேண்டும். சிவகுமாரனின் விடுதலைப் பயணத்தில் அவர் காட்டிக்கொடுப்புக்களுக்கும் தேசத்துரோகங்களுக்கும் எதிராகப் போராடியுள்ளார். மேலும் காலத்துக்குக் காலம் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்பது எமது போராட்டத்தில் திடகாத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.

சிவகுமாரன் என்ன என்ன இலட்சியத்தைக் கொண்டு தன் இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அவரது இலட்சியத்துக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் நாம் திடமாகப் பயணிக்கவேண்டியவர்களாகவுள்ளோம். எம் போன்றோருக்கு அவரது தியாகமும் இலட்சியமும் எப்போதும் சுவடாக அமைகின்றது.

தடைகள் இருந்த சமயத்திலும் பல்வேறு இடர்பாடுகளைத் தாண்டியும் நாம் இங்கே அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். அண்ணன் சிவகுமாரன் அவர்களுடைய சிலைகள் கூட பல்வேறு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட உடைக்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட சிலை மண்ணுக்குள் புதையுண்டு காணப்பட்ட நிலையில் அதனை நான் தவிசாளராகப் பெறுப்பேற்ற உடன் மீள குறித்த வளாகத்திற்குள் பிரதிஷ்டை செய்திருந்தேன்.

அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது அஞ்சலி செய்துள்ளேன். வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.