பல்கலை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள வங்கிக் கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்! சுசில் பிரேமஜயந்த உறுதியளிப்பு

வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

அது தொடர்பில் அரச வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது –

வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்படும் கடன்களுக்கான வட்டி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேர்ந்துள்ளது. அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

பல்கலைக்கழக மாணவர்கள்  ஆறு குழுக்களுக்கு கடந்த வருடம் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இறுதியாக அதன் ஆறாவது குழுவின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அமைச்சரவையில் பேச்சு நடத்தி முடிவொன்றை மேற்கொண்டு தீர்வை பெற்றுக் கொண்டோம்.

எனினும்  ஏழாவது குழுவின் பிரச்சினைக்குக் காரணம், நூற்றுக்கு 9 வீதமாக இருந்த வட்டி வீதம் தற்போது 20 வீதமாக அதிகரித்துள்ளமையாகும். அந்தளவு அதிக வட்டி வீதத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதே அவர்களது பிரச்சினை.

அது தொடர்பில் நாம் பேச்சுகளை மேற்கொண்டோம்.

அதற்கிணங்க இதுவரை இலங்கை வங்கி மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த அந்த கடன், இனிமேல் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி மூலமும் பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த வங்கிகள் சமமாக பகிர்ந்து கொண்டு அந்த கடனை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அது தொடர்பில் இலங்கை வங்கியுடனான பேச்சொன்று நடைபெறவுள்ளது.  அதனையடுத்து மூன்று வங்கிகள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுடன் அது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் நிலையான வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் 15 வீதமாகக் குறைவடையலாம் என  அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அந்த 20 வீத வட்டியும் மேலும் குறைவடையலாம்.

12 வருடங்களுக்காக வழங்கப்படும் இந்த கடன்கள் தொடர்பில் மாணவர்களுக்கு சிறந்த அவகாசம் உள்ளது என்பதால் அது தொடர்பில் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எவ்வாறெனினும் ஓரிரு தினங்களில் நடைபெறும் பேச்சையடுத்து அது தொடரில் சிறந்த தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.