சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரத்தில் நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதிப்படுத்துங்கள்! 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அரசிடம் வலியுறுத்து

 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ளாவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கையிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள், மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழு, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் குழு, சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்ட சமூகம், கனேடிய சட்டத்தரணிகளின் உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலகளாவிய அமைப்பு ஆகிய 8 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –

சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான வழக்கு விசாரணைகளின்போது நியாயமான வழக்கு விசாரணைக்கு உட்படுவதற்கான அவரின் உரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் தீவிர கரிசனையடைகின்றோம். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளர் அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்ற ரீதியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முற்பட்டதன் விளைவாகவே அவர் தண்டிக்கப்பட்டார் என்று நம்புவதற்கான வலுவான காரணங்கள் எம்மிடம் உள்ளன.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், சாட்சியாளருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் இந்த விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மிகுந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக 11 – 14 வயதுக்கு இடைப்பட்ட 4 சிறுவர்கள் உயர்நீதிமன்றத்திடம் முறைப்பாடளித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சிலரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதுடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்ட முதலாவது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆவார்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் நியாயமான வழக்கு விசாரணை ஆகியவற்றில் மட்டுப்பாடுகளை ஏற்படுத்துவுதற்கும், அரசியல் ரீதியான மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டுவருவதாக சர்வதேச ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யத் தவறியிருப்பதால், அந்தச் சட்டத்தைத் திருத்தியமைக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் பலமுறை வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும், அச்சட்டத்தில் அர்த்தமுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தவறியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சட்டத்தின்கீழ் நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ளாவதற்கான அனைத்து வாய்ப்புக்களும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்படவேண்டும்.

அத்தோடு அவருக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளும் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் சாட்சியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டும் என்று அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.