தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும்வரை இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை! மனித உரிமைகளிற்கான பிரதி ஆணையாளர் சுட்டிக்காட்டு
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு இந்த வருட ஆரம்பத்தில் அனுமதி வழங்கியுள்ளபோதிலும் – இது முக்கியமான முதல் நடவடிக்கை – இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான பேச்சுகள் தொடர்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரைக் கட்டுப்படுத்துவதற்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளது என நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அநேகமான தருணங்களில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள் இடம்பெறுகின்றன. பொலிஸாரின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை