தொண்டாவுக்கு பலர் முதுகில் குத்தும்போது பக்க பலமாக இருந்தவர் முத்து சிவலிங்கம்!  ஜீவன் தொண்டமான் அஞ்சலி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர் முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம். அத்துடன் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு முதுகில் குத்திவிட்டு பலர் வெளியேறினாலும் இவர் பக்க பலமாக இருந்தவர் என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லரின் பெரேரா, ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

முத்துசிவலிங்கம்  அமைதியான மனிதர். சேவை மனப்பான்மை கொண்டவர். தான் மட்டும் வளராமல் கட்சியில் உள்ள அனைவரையும் வளர்த்துவிட்ட மா மனிதர் ஆவார்.

நான் சபரிமலைக்கு முதன் முறையாக மாலை அணிந்திருந்தவேளையிலேயே அவர் உயிரிழந்திருந்தார். மாலையை கழற்றி வைத்து விட்டாவது அஞ்சலி செலுத்த செல்வோமா என நினைத்தேன். ஆனால் முதன்முறை என்பதால் அதனை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த வலி இன்னும் என்னுள் இருந்துகொண்டு இருக்கிறது.

50 வருடகாலத்துக்கு மேலாக மக்களுக்கும், கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் சேவையாற்றிய அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டதா என்ற வினாவுக்கான விடை கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அதுவும் எனக்கு வேதனையைத் தந்தது.

ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவரின் முக்கியம் தெரியாது. இல்லாமல்போனால்தான் அதன் வலி புரியும். முத்துசிவலிங்கம் போன்ற அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அவர்போல் ஒரு தலைவரை உருவாக்கவும் முடியாது.

குரலை உயர்த்தி பேசுவது தலைமைத்துவம் கிடையாது.  நாம் பேசும்போது மற்றயவர்களின் குரல்களை அடங்க வைப்பதுதான் தலைமைத்துவம். அப்படிபட்ட ஒரு தலைவர்தான் முத்துசிவலிங்கம். கட்சிக்காக விசுவாசமாக இருந்தார். மலையகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கியதால் மக்கள் அன்பால் அவருக்கு மின்சார கண்ணா என்றுகூட அழைத்து வந்தனர்.

ஆறுமுகன் தொண்டமானுக்கு தூணாக இருந்தார். முதுகில் குத்துவிட்டு பலர் வெளியேறினாலும் பக்க பலமாக இருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸைக் கட்டியெழுப்புவதற்கு பக்க பலமாக இருந்தார். கட்சியில் சமரச தூதுவராக செயற்பட்டார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.