ஹங்குரன்கெத்த பொலிஸுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!
ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்துக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (26) இரவு 10 மணியளவில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோதே வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்களும் பெண்களுமாக 200 பேர் அங்கு காணப்பட்டதாகவும் ஆண்களில் பலர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு குழுமியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை