உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், இது தொடர்பான தகவல்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் ஆராய வேண்டும். எமக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைவாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியமே பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு இதனை மேற்கொள்வதுதான் சரியான செயற்பாடு என்று ஆளுநர் கூறினாலும், நாம் இதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது.

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை.

இது தொடர்பான முழுமையான தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு இதனால் பாதிப்பொன்று ஏற்படாது என்றே அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.

இந்த நிலையில், தற்போது இதற்கு முரணாக செயற்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய முடியாது.

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதே எமது கொள்கையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.