அஸ்வெசும நலன்புரி திட்ட முரண்பாடு: தீர்வின்றேல் நீதிமன்றத்தை நாடுவோம்! ஜகத் குமார சுமித்ராராச்சி எச்சரிக்கை
அஸ்வெசும நலன்புரி திட்ட விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார். தீர்வின்றேல் நீதிமன்றத்தை நாடுவோம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.
தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
தவறான தரப்படுத்தலுக்கு அமையவே அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.தகுதியானவர்கள் புறக்கணிக்கபட்பட்டு தகுதியற்றவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் அஸ்வெசும செயற்திட்டத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஆளும் தரப்பு கூட்டத்தின் போது எடுத்துரைத்தோம். பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் உரையாடினேன்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார். பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியலை இந்த வாரம் வெளியிட தீர்மானித்துள்ளதாக நலன்புரி திட்ட சபை குறிப்பிட்டுள்ளது.நலன்புரி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யலாம்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்ப பயனாளர்களின் பெயர் விவரம் கடந்த மாதம் 20 ஆம் திகதி வெளியானது.தகுதி இருந்தும் புறக்கணிக்கபபட்டவர்கள் மேன்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் பிரதேச சபை ஊடாக மேன்முறையீடு செய்ய வேண்டும். – என்றார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 304 மேன்முறையீடுகளும், 7 ஆயிரத்து 965 முறைபாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன என அஸ்வெசும நலன்புரி திட்ட சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை