கப்பம் பெற்றவர்கள் அமைச்சரவையில் இருக்கையில் மக்கள் எவ்வாறு நாட்டின் நீதித்துறையை நம்புவர்;?  விஜித ஹேரத் கேள்வி

கப்பம் பெற்ற விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்கும் போது நாட்டு மக்கள் எவ்வாறு நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் மனித படுகொலையிலும் ஈடுபடலாம் அவர்களுக்கு ஒரு நீதி சாதாரண மக்களுக்கு பிறிதொரு நீதி என்ற நிலையே காணப்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும். ஏட்டில் உள்ள சட்டங்கள் சமத்துவமான முறையில் செயற்படுத்தப்படுகின்றனவா என்பது பிரதான பிரச்சினையாக உள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதாரப் பாதிப்பு  இயற்கையாக நேர்ந்ததொன்றல்ல. பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரப் படுகொலையாளர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது  பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டின் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். கந்தளை சீனிதொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய இந்திய நிறுவனம் முதலீடு செய்த போது தொழிற்சாலையில் இருந்த 50 கோடி ரூபா பெறுமதியான பழைய இரும்புகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் ஜனாதிபதியின் செயலணியின் அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளிடம்  அகப்பட்டார்கள்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது பஷில் ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கிறாரா, இல்லையா என்று பார்ப்பார்கள். அவர் இருந்தால் திரும்பி சென்று விடுவார்கள். இது நாட்டு மக்கள் அறிந்த உண்மையே. வெளிநாட்டு  முதலீட்டாளர்கள் எவருக்கும் கப்பம் செலுத்தாமல் தமது முதலீடுகளை செய்வது உலக அதிசயமாகும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் கப்பம் பெறும் கலாசாரம் இல்லாதொழிக்கப்படவில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டு மக்கள் நீதிமன்றக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.

மரண தண்டனை குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், கப்பம் பெற்றவர்கள் பல வழிமுறையில் சட்டத்தில் இருந்து தப்பித்து அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் சிறு குற்றம் செய்தாலும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதுவே இன்றைய உண்மை நிலை. சட்டவாட்சி கோட்பாடு முறையாக செயற்படுத்தாமல் ஒருபோதும் மாற்றத்தை எடுத்த முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.