முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்தங்களை நீதி அமைச்சர் விஜயதாஸவிடம் நாம் கையளித்தோம் ரிஷாத் சபையில் தெரிவிப்பு
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி அமைத்த குழுவினர் சமர்ப்பித்த ஆலோசனைகளில் உடன்பட முடியாதென்பதால் 18 முஸ்லிம் எம்.பி.க்கள் கையொப்பமிட்டு பௌசி எம்.பி. தலைமையில் முஸ்லிம், விவாக, விவாகரத்து சட்டம் சம்பந்தமான திருத்தங்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வியாழக்கிழமை கையளித்தோம்.
அததுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களாகச் செயற்படும் சிலரே இஸ்லாம் பெண்களின் உரிமையை மறுக்கின்றதென பிரசாரம் செய்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –
சுதந்திரத்தின் பின்னர் நாடு நாசமடைவதற்கு அரசியல்வாதிகளும் ஆட்சி பீடங்களில் இருப்பதற்காக தேவைக்கேற்ப தங்களுடைய மக்களை ஏமாற்றி இனவாதங்களையும் மதவாதங்களையும் ஏற்படுத்தி இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டனர்.
நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு நாம் மிக வேதனையான ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் நாட்டு மக்களின் பெரியதொரு எதிர்பார்ப்பே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் ஒரு சட்டமூலமாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இது காலத்தின் தேவை.
தேவையான ஒன்றை தேவையான நேரத்தில் கொண்டுவந்துள்ளீர்கள். ஆனால் அது பாரபட்சம் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் நிச்சயமாக அது நாட்டுக்கு நல்லதாக அமையும்.
அதனால் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ்விடம் 18 முஸ்லிம் எம்.பி.க்கள் கையொப்பமிட்டு பௌசி எம்.பி. தலைமையில் முஸ்லிம், விவாக, விவாகரத்து சட்டம் சம்பந்தமான திருத்தம் சம்பந்தமாக ஓர் ஆவணத்தை கையளித்துள்ளோம்.
முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி அமைத்த குழுவினர் சமர்ப்பித்த ஆலோசனையை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ் அண்மையில் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடத்தில் ஒப்படைத்தார்.
இதில் பல விடயங்கள் எங்களால் உடன்பட முடியாத விடயங்களாக இருந்தமையால் அதில் குறிப்பாக முஸ்லிம் என்ற பெயர் அதாவது சொல் நீக்கப்பட்டு முஸ்லிம் நபர் என்று போடப்பட்டிருந்தது. நிக்கா என்ற வசனம் முற்றாக நீக்கப்பட்டு, நிச்சயப்படுத்தல் என்ற சொல் போடப்பட்டிருந்தது.
அதேபோன்று வழி (பெண்ணின் பாதுகாவளர்) தந்தை, தந்தை சார்ந்த அல்லது சகோதரன் அல்லது தாயின் சகோதரன் போன்ற வகையிலே இருக்க வேண்டும் .ஆனால் வழி முற்றாக அகற்றப்பட்டு, அதாவது பெண் விரும்புகின்ற ஒருவரை வழியாக இருக்கலாம் என்று போடப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி இன்னும் பல விடயங்களில் எங்களினால் உடன்பட முடியாது என்பதை நீதி அமைச்சரிடம் நாம் சுட்டிக்காட்டியபோது அவர் நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி உங்களின் திருத்தங்களை ஆலோசனைகளை முன்வையுங்கள் .இதனை இன்னும் காலதாமதப்படுத்த முடியாது என்று கூறினார்.
அந்த அடிப்படையில் பௌசி எம்.பி. தலைமையில் எங்களின் எம்.பி.க்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் இங்கு அழைத்து அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி இந்த விடயங்களில் இஸ்லாமிய ஷரீயாவுக்குள் உள்ளடங்கிய திருத்தங்களை நீதி அமைச்சரிடம் கையளித்துள்ளோம்.
20 முஸ்லிம் எம்.பி.க்கள் இங்கிருக்கின்றார்கள் அதில் 18 பேர் கையொப்பமிட்டு இதனை கையளித்துள்ளோம். எனவே, நீதி அமைச்சர் எமது வேண்டுகோளை ஏற்று செயற்பட வேண்டும் எனக் கேட்கிறோம்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களாக செயற்படும் சிலர் இஸ்லாம் பெண்களின் உரிமையை மறுக்கின்றதென சொல்லுகின்றனர். இஸ்லாம் பெண்களைக் கற்பதற்கு அனுமதிக்கின்றது. இஸ்லாமிய பெண்கள்தான் மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக பல துறைகளில் உயர்ந்திருக்கின்றார்கள்.
ஆகவே, இஸ்லாமிய மார்க்கம் பெண்களை எங்கும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஆவில் ஒரு வரையறை இருக்கின்றது. எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது ,எது ஆண்களுக்குரியது, எது பெண்களுக்குரியது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் நீதி அமைச்சர் நேர்மையாக செயற்பட வேண்டும். 22 லட்சம் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புத்தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா. அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத்தான் இந்த திருத்தங்களை முன்வைத்துள்ளோம்.எனவே இதனை நியாமாக ஏற்று செயல்படுத்துங்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை