வவுனியாவை வனாந்தரமாக்கவல்ல சீனி தொழிற்சாலை திட்டத்தை கைவிடுங்கள்! ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்
வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதியும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், எனவே ஒருகாலத்தில் வவுனியா மாவட்டத்தை வனாந்தரமாக்கக்கூடிய இந்தச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு –
வவுனியாவில் கரும்பு வளர்ப்பதும், சீனித்தொழிற்சாலை அமைப்பதும் வடமாகாணம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாடும் பொருளாதார செழிப்பை அனுபவிப்பதற்கு வழிவகுக்காது.
நான் முதலமைச்சராகப் பதவிவகித்தபோது, வடமாகாணத்தில் பாரியளவிலான கரும்பு பயிரிடல் செயற்திட்டம் எமது பரிசீலனைக்கு வந்தது.
இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் செயற்திட்ட அறிக்கையைப் பரிசீலித்ததன் பின்னர், அந்தச் செயற்திட்டம் வடக்கு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் என்பதால், அதனை நிராகரித்தோம். தற்போது இந்தச் செயற்திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது.
சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கான 500 ஏக்கர் காணியுடன் சேர்த்து மொத்தமாக 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தச் செயற்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
செழித்து வளர்வதற்குப் பெருமளவான நீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்றான கரும்பு ஒரு நீண்டகாலப் பயிராகும் (18 மாதங்கள்). அதன்படி ஒரு ஹெக்டேயர் காணியில் பயிரிடப்படும் கரும்புக்கு வருடமொன்றுக்குத் தேவையான நீரின் அளவு 2000மி.மி – 3000மி.மி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வடமாகாண உலர்வலயம் தண்ணீர் பஞ்சத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண நீர்வளத்தை வற்றச்செய்யக்கூடிய செயற்திட்டத்தை எதற்காக நடைமுறைப்படுத்த முற்படுகின்றீர்கள்?
வவுனியாவும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களும் ஏற்கனவே குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளன.
பாரிய ஏரிகள், நதிகள், நீர்நிலைகள் இல்லாத வவுனியாவிலும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலும் இருந்து கரும்புப்பயிர்ச்செய்கைக்குத் தேவையான பெருமளவு நீரை எவ்வாறு பெறப்போகின்றோம்? அப்பகுதிகளிலிருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால், வெகுவிரைவில் வவுனியா மாவட்டம் வனாந்தரமாகிவிடும்.
அதேபோன்று இங்கு கரும்புப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் பட்சத்தில், தென்னை, நெல் உள்ளிட்ட ஏனைய அனைத்துப் பயிர்களும் நீரின்றிப் பாதிப்படையத்தொடங்கும். எனவே இப்பிரதேசத்தின் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிப்படையும்.
அதுமாத்திரமன்றி மகாவலி செயற்திட்டத்தைப்போன்று, இக்கரும்புப்பயிர்ச்செய்கை செயற்திட்டமும் தமிழர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் சிங்களக்குடியேற்றங்களை எளிதாக நிலைபெறச்செய்வதற்கு வழிகோலும்.
இதன்மூலம் மக்கட்பரம்பல் மாற்றமடையும். ஆகவே, இந்தச் செயற்திட்டம் எதிர்வருங்காலத்தில் தமிழ்மக்களின் நல்வாழ்வை வெகுவாகப் பாதிக்கும். நீங்கள் அடுத்த தேர்தலில் தமிழ்மக்களின் வாக்கைப் பெறவேண்டுமேயானால், இந்தத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுங்கள் என்று விக்கினேஸ்வரன் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை