தேசியக் கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கு நிவாரணம்!  சம்பிக்க குற்றச்சாட்டு

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது. நாட்டின் கடன் நிலை மறுசீரமைக்கப்பட வேண்டும், கடன் நிலை நிலைபேறான தன்மையில் இல்லை என்பதை 2016 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு அறிவித்தேன். இருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அப்போது அவதானம் செலுத்தப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்களின் தூரநோக்கமற்ற பொருளாதார முகாமைத்துவ பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொருளாதாரப் பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் அதிக வட்டி வீதத்துக்கு சர்வதேச பிணைமுறியாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்கள் பொருளாதார பாதிப்பைத் தீவிரப்படுத்தியது. இருப்பினும் வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தேசிய கடன் மறுசீரமைப்பை தவிர்க்க முடியாது.தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த திட்டங்கள் தவறானதாக உள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி விநியோகித்துள்ள திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் போது மத்திய வங்கி ரூபா பெறுமதி அலகு நெருக்கடியை எதிர்கொள்ளும்.

இந்த நிலையை முகாமைத்துவம் செய்ய ஒன்று நேரடி வரி அறவீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்.

இந்த இரு தீர்மானங்களையும் அல்லது ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பரிந்துரைகளை அரசாங்கம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் நிறைவுப்படுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.