பொருளாதாரத்தின் மீட்சியை நோக்கிய பயணத்தை இலங்கை தொடரவேண்டும் ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்
இலங்கையின் பொருளாதார நிலைவரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தாலும் இன்னமும் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் வங்கிக்கற்கைளுக்கான நிலையம் மற்றும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் என்பன இணைந்து ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையுடன் கடந்த ஆண்டு பெரும்பாகப்பொருளாதாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கற்கைநெறியொன்றை முன்னெடுத்திருந்தன. அக்கற்கைநெறியை பூர்த்திசெய்த ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து பத்திரிகை ஸ்தாபனத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்திட்டம் பொருளாதாரம் மற்றும் நிதியியல் விவகாரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்புச்செய்திருப்பதுடன் அரசாங்கத்துக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அத்தோடு கடந்த ஆண்டு இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தற்போது பொருளாதார நிலைவரம் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தாலும் இன்னமும் பல சவால்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்தார். குறிப்பாக அண்மையகாலங்களில் பதிவாகிவரும் பெருமளவான மனிதவள வெளியேற்றம் தொடர்பில் பிரஸ்தாபித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பொருளாதார மீட்சி என்பது இலகுவானதல்ல என்றும் அதனை முன்னிறுத்திய பயணத்தை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தறிவு வீதம் மிகவும் உயர்வாகக் காணப்படுகின்ற போதிலும், கடந்தகால ஆய்வுகளின்படி பொருளாதார மற்றும் நிதியியல் விடயங்கள் தொடர்பான அறிவு மிகக்குறைவான மட்டத்திலேயே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார். அதன் விளைவாகவே ‘பிரமிட் திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களின் ஊடாக நிதிமோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அவற்றால் பலர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், நாடாளுமன்றத்தில் மத்திய வங்கிச்சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது, அதில் பலர் அவசியமான விடயங்கள் தொடர்பில் பேசவில்லை என்பதை ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். எனவே, இத்தகைய கற்கைநெறிகள் மூலம் ஊடகவியலாளர்களுக்கும் மத்திய வங்கியின் பொருளியலாளர்களுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதும், பொருளாதார விவகாரங்கள் குறித்த ஊடகவியலாளர்களின் அறிவு மேம்படுத்தப்படுவதும் சமூகத்துக்கு நன்மைபயக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சுட்டிக்காட்டியதுடன் ஊடகவியலாளர்கள் செய்திகளை எழுதும்போது மிகச்சரியான தன்மை, சுயாதீனத்துவம், பக்கச்சார்பற்ற தன்மை, மனிதாபிமானம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஐந்து பிரதான கூறுகளை மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை