முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் வாகன தரிப்பிடம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறி, நீதிமன்றத்தின் அருகில் வாகன தரிப்பிடமொன்றை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்துக்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
வாகன நெரிசல் மிகுந்த இத்தகைய சூழ்நிலையில் நீதிமன்ற தேவையின் நிமித்தம் வரும் பொதுமக்கள் வாகனங்களை வீதியின் இரு மருங்கிலும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் பயணிகளும் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமப்படுகின்றனர்.
குறித்த பகுதியில் வாகன தரிப்பிடம் இல்லாததன் காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகிறது.
எனவே, நீதிமன்றத்துக்கு முன்பாகவோ அல்லது அண்மித்த பகுதிகளிலோ வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு மன்றுக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை