உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்! இளைஞர்களுக்கான செயலமர்வு
நூருல் ஹூதா உமர்
ஆசிய மன்ற நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற ‘ உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினூடாக இளைஞர்களை வலுவூட்டும் செயற்றிட்டத்தின்’ கீழ் இளைஞர்களைத் தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வு திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் என்.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம செயற்பாட்டு அதிகாரி கலன வீரசிங்க நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த இளைஞர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வின் பிரதான வளவாளராக உள்ளுராட்சி மன்றங்களின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்பாடு, செயற்பாடு, உப சட்ட விதிகள், நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
உள்ளூராட்சி சபைகளால் குடிமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படும் பொதுச் சேவைகளை பகுப்பாய்வு செய்தல், அனைத்து குடிமக்களுக்கும் சமமான முறையில் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த பயிற்சி கலந்துரையாடலில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன உத்தியோகத்தர்கள், திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூக பொதுநிறுவன, இளைஞர் கழகங்களின் நிர்வாகிகள் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Exif_JPEG_420

Exif_JPEG_420
கருத்துக்களேதுமில்லை