வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்தப் போவதில்லை நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல திட்டவட்டம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

மனித வள முகாமைத்துவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுப்பாக தொழிற்சங்கத்தினர் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

அமைச்சரவையின் அனுமதியுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அரச சொத்து மதிப்பீட்டை அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஆகவே இதனை தனியார் மயப்படுத்தல் என்று குறிப்பிட முடியாது. என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் பொருளாதாராப் பாதிப்புக்கு நிலையான தீர்வு காண முடியாது.ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒருசில நிறுவனங்களின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியாத தன்மை காணப்படுகிறது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மறுசீரமைப்புக்களின் போது மனித வள முகாமைத்துவத்தை பாதுகாக்க சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே மறுசீரமைப்பு பணிகள் வினைத்திறனான முறையில் வெளிப்படையாக முன்னெடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.