மலவாசலில் மறைத்து தங்க ஜெல் கரைசலை கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதி விமான நிலையத்தில் கைது

இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 03 கெப்ஸியூல்களை கடத்திச் செல்லும்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதான முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (18) மாலை 04.05 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் செல்வதற்கு குறித்த நபர் அங்கு வந்திருந்தபோது, அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில், சோதனைகளை மேற்கொண்டபோது அவரது மலவாசலில் ஒரு கிலோ 280 கிராம் நிறையுள்ள தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 கெப்ஸியூல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்க ஜெல் கரைசலை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் மட்டுமே உள்ளதாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்க ஜெல் கரைசல் அடங்கிய கெப்ஸியூல்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்தில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரண அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட நபர் இன்றைய தினம் (19) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.