மலையக தமிழர் வாழ்வும் வலி நிறைந்ததே; உரிய தீர்வுகள் வழங்கப்படல் வேண்டுமாம்! ரவிகரன் வலியுறுத்து
விஜயரத்தினம் சரவணன்
மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே மலையகத் தமிழர்களுக்கும், வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படவேண்டுமெனவும் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
மலையகத் தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து மார்க்கமாக அழைத்துவரப்பட்டு தலைமன்னாரில் தரையிறக்கப்பட்டதாகவும், மலையகப் பகுதிகளுக்கு கால்நடையாக அழைத்துச்செல்லப்பட்டனர் எனவும் நாம் வரலாறுகளிலிருந்து அறிகின்றோம்.
அந்தக் காலத்தில் நிறைவான வீதிகளோ, நிறைவான வைத்திய சேவைகளோ இல்லாத காரணத்தால், இவ்வாறு அழைத்துவரப்பட்ட பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், இரண்டரை லட்சம் பேர்வரையில் மரணித்தனர் எனவும் மலையக மக்களின் வரலாறுகள் கூறுகின்றன.
அந்தவகையில் இவர்களுடைய வரலாறு வலி நிறைந்த வரலாறாகும்.
இவ்வாறு இவர்கள் இங்கு வந்து 200 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த மலையக மக்கள் இன்றளவும் பல இடங்களில் தரக்குறைவாக நடாத்தப்படுகின்ற, தரக்குறைவாக அழைக்கப்படுகின்ற மிக மோசமான சம்பவங்களை நாம் அவதானிக்கின்றோம். அவை மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.
அதேவேளை கடந்த 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா, சாஸ்திரி ஒப்பந்தத்தில் எமது மலையகமக்கள் நாடுகடத்தப்பட்டனர்.
அவ்வாறு நாடுகடத்தப்பட்ட எமது மலையக உறவுகள் தற்போது இங்கு இருந்திருந்தால் தமிழ் சமூகம் மிகப்பெரியதொரு அந்தஸ்தை அடைந்திருக்கும்.
அதேவேளை இவ்வாறு நாடுகடத்தப்பட்ட மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் தந்தையார் வி.பி.கணேசன் உள்ளிட்டவர்களும் நாடுகடத்தப்பட்டிருந்தால் இன்று மனோ கணேசன் போன்ற திறமையானவர்களை நாம் பெற்றிருக்க முடியாது.
அதேபோல் தற்போது இங்கிருந்து தமிழ் நாட்டுக்குச் சென்று சிறப்பான தனது குரல் வளத்தால் அசானி என்ற மலையகச்சிறுமி பாடல்களைப் பாடி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றார்.
அவர்களுடைய குடும்பங்களும் இங்கிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு சிறந்த பாடகியை நாம் கண்டிருக்க முடியாது.
இவ்வாறாக இன்னும்பல திறமைவாய்ந்த மலையைக உறவுகள் இருக்கின்றார்கள்.
இவ்வாறாக மலையப் பகுதிகளிலும், வடக்கு, கிழக்கில் எம்மோடும் இணைந்து வலிகளோடு வாழ்கின்ற மலையகத் தமிழர்களுடைய வலிக்கும், வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய வலிக்கும் ஒரு சிறந்த தீர்வு வேண்டும். அதற்காக இறைவன் துணை நிற்கவேண்டும் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை