தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்படும் இடங்களை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதனாலேயே பிரச்சினை!  முஷாரப் எம்.பி. சுட்டிக்காட்டு

நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அவை முழு நாட்டு மக்களினதும் சொத்தாகும் . என்றாலும் தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்படும் போது அந்த இடத்தை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதாலேயே பிரச்சினைகள் உருவாகின்றன என எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியிலும் ஆங்காங்கே சில இனவாத மோதல்களை அவதானிக்கின்றோம். மீண்டும் ஒரு தேர்தலை மையப்படுத்தி நாட்டை சின்னாபின்னமாக்க எல்லா தரப்பினரும் செயற்படுகின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன. தொல்லியல் விடயம் ஏதேனும் மத விடயத்துடன் தொடர்புடையது என்று எப்போது பேசத் தொடங்கினோமோ அப்போதிருந்தே இந்த நாட்டில் பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரங்களுக்காக பணத்தை பௌத்த பிக்குகளே வழங்குகின்றனர் என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த இடத்தில் இருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் உரிமை எங்கிருந்து கிடைத்தது? அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகின்றது? தொல்லியல் இடம் என்பது எல்லா மதத்தவர்களுக்கும் உரித்தான இடம் என்பதை நாம் எப்போது ஏற்றுக்கொள்ளப் போகின்றோம்.

பாகிஸ்தானில் பௌத்த தொல்லியல் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அந்த நாட்டின் சொத்தாக இன்னுமொரு மதத்தவர்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் இங்கே இந்து, இஸ்லாம் மதங்கள் சார்ந்த தொல்லியல் அடையாளங்கள் தொடர்பில் தொல்லியல் திணைக்களத்துக்கோ, அமைச்சுக்கோ எந்த அக்கறையும் இல்லை. தொல்லியல் சின்னம் இங்குள்ள அனைவருக்கும் உரித்தானது. இது தேசத்தின் சொத்து.

இதனை ஒருசாரார் மாத்திரம் உரிமை கோருகின்றனர். தொல்லியல் இடம் என்று அடையாளம் காணும் போது உடனடியாக சிலையை வைத்து பௌத்த இடமாக அடையாளம் காட்டும் போதே பிரச்சினை வருகின்றது. இன்னும் இன்னும் நாங்கள் இனவாதம், மத வாதத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் நாடு வாழ்வதற்கு பொருத்தமில்லாத நாடாகவே மாறும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்