சிங்கப்பூர் – இலங்கை பொருளாதார ஒருமைப்பாடு தொடர்பில் அவதானம்! காபன் சீராக்கல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து  இருதரப்பு பேச்சுகள் ஆரம்பமாகின.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும்  ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியிருந்ததோடு, பரந்த பொருளாதார ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இற்கு அமைய, காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் நிரந்தரச் செயலாளர்(அபிவிருத்தி) பெக் ஸ்வன் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இற்கு அமைய, சர்வதேச காபன் வணிகத்தின் கீழ் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் இலாபகரமான முறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதற்கமையவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,  காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் நிலைபேறு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்