சின்னமுத்து நோய்ப் பரவலை முன்கூட்டியே தடுப்பதற்கு மத நிறுவனங்களுடன் சந்திப்பு!

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம். பஷாலால் சின்னமுத்து மற்றும் ஜெர்மன் சின்னமுத்து உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பிலும் அதற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் அவசியம் பற்றியும் செவ்வாய்க்கிழமை பணிமனையின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொழும்பை அண்டிய பகுதிகளில் தடுப்பூசிகளை பெறாத சில குழுக்களால் இவ்வாறான நோய்ப்பரவல் ஏற்படுவதாக அறிய கிடைக்கப்பெற்றதை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் பற்றியும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டதுடன் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக மத நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுவதற்கான பொறிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மத நிறுவனங்களின் பங்களிப்பை பெற்று மத நிறுவனங்களின் ஊடாக தொற்று நோய்கள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பிலான விழிப்புணர்வை வழங்கி பிராந்தியத்தில் இவ்வாறான சடுதியான நோய்கள் ஏற்படுவதையும் அதனால் ஏற்படும் மரணங்கள் மற்றும் பாரதூரமான இழப்புக்களை தவிர்ப்பதற்காகவும் இவ்விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது பிரதான உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாக கல்முனை பிராந்திய உள நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபலால் தற்போது சில பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத நிறுவனங்களின் ஊடாக அது தொடர்பிலான விழிப்புணர்வை வழங்குவது பற்றிய விசேட உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம். பி. அப்துல் வாஜித், பணிமனையின் பிரிவுத் தலைவர்களும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் மத குருக்களும் பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.