இனங்களுக்கிடையில் மோதல் உருவாக்க சதி: மக்களே விழிப்புடன் இருங்கள் என்கிறார் முஜிபுர்!

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மட்டக்களப்பு காணி பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் வகையில் தூண்டுதல் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டில் இனரீதியான மோதலை உருவாக்கி தற்போது உள்ள அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

அண்மைக்காலமாக குருந்தூர்மலை பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு இனப்பிரச்சினையை தூண்டும் விதமாக சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றமை மற்றும் செயற்பாட்டு ரீதியாக தலையிடுவது என்பவற்றை நாம் காண்கிறோம்.

மட்டகளப்பில் காணிப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு இரண்டு இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் வகையில் தூண்டுதல் மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

மேலும் நாட்டின் இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புகள் மற்றும் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்பது புரிகிறது.

திட்டமிட்டு இதனைச் செய்து மீண்டும் நாட்டில் இனரீதியான மோதலை உருவாக்கி தற்போது உள்ள அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் திட்டங்களா? என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே நாம் மக்களுக்கு கூறுகிறோம். விழிப்புணர்வுடன் இருங்கள். தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ராஜபக்ஷ தரப்பினரும், விக்கிரமசிங்க தரப்பினரும் இணைந்து சதி திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நாம் கண்டோம். இந்த சதித் திட்டத்தின் மற்றுமொரு விளைவு என்பது தற்போது வெளி வர ஆரம்பித்துள்ளது.

இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் வாசிக்கும் போது திருட்டு, குண்டர்கள், அரசியலவாதிகள் இனவாதத்தின் பின்னால் மறைந்து கொள்வது அறிகிறோம்.

வரலாற்றிலும், இதற்கு முன்னரும் கண்டோம். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் திட்டமிட்டு நாட்டின் இனப்பிரச்சினை மற்றும் மோதலை அரங்கேற்றப்படவுள்ளதா? என்பது எமக்கு தெரியாது.- என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்