சம்பள நிலுவையான 25,10,400 ரூபாவை பெற்று குவைத்திலிருந்து நாடு திரும்பிய பணிப் பெண்!
அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
46 வயதான ஜெனிட்டா டெலிகா என்ற காலி, கோனாபினுவில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மிகப் பெரிய சம்பளப் பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக குவைத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அந்த நாட்டில் பாடசாலை ஆசிரியையான பெண் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இவர் ஆசிரியையான எஜமானியால் பலத்த துன்புறுத்துக்கு உள்ளாகினார்.
‘அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பார். ‘எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை’. என ஜெனிடா டெலிகா கூறுகிறார்.
இதுபற்றி அம்மாவிடம் தெரிவித்தேன். அதன்படி, 02.02.2022 அன்று அம்மா கொழும்பு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இது தொடர்பில் முறையிடப்பட்டதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டுப் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தனர்.
அப்போதும் குறித்த வீட்டிலேயே ஜெனிடா டெலிகா பணி புரிந்து வந்ததால் வீட்டின் உரிமையாளரை அந்நாட்டு பொலிஸார் அழைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.
அந்த வீட்டில் 3 வருடங்களும் 8 மாதங்களும் பணியாற்றிய ஜெனிடாவுக்கு ஒரு வருடமும் 3 மாதத்துக்குமான சம்பளமே வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை அப்பகுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, மீதமுள்ள சம்பள பாக்கியை வழங்குவதற்கு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதுவரை ஜெனிட்டா டெலிகா இலங்கை தூதரகத்துடன் இணைந்த வரவேற்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் தனக்கான பாக்கிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை