பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பொறுப்பும் நிதானமும் வேண்டும்!  இலங்கை வர்த்தக சபை சுட்டிக்காட்டு

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் இது தவிர தற்போதைய சூழல் இருந்து மீண்டு வர வேறு எந்த வழிகளும் இல்லை எனவும் இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

அரசாங்கத்தையும், எதிர்தரப்பையும் முதலீட்டில் ஈர்ப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுத்துடுவது என்ற அடிப்படையிலேயே எமது அணுகுமுறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதும்  அதற்காக நாங்கள் ஏன் அறிக்கை வெளியிடுவதில்லை என்று பலர்  கேட்கிறார்கள்.

சில விடயங்கள் அரசாங்கத்துக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.வெறும் அறிக்கைகளை வெளியிடுவதை விட எப்பொழுதும் நாட்டைப் பற்றியே முதலில் சிந்திக்க வேண்டும் என்பதுடன் பங்குதாரர்கள், அரசாங்கம் மற்றும் எதிர் தரப்புடனான சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

நாங்கள் அவ்வாறே செயற்பட்டுள்ளோம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது அணுகுமுறை சூழ்நிலையைச் சமாளிப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக கடந்த ஆண்டு பொருளாதார வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை பதிவு செய்தது. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடு பாதிப்பை சந்தித்தது எனலாம்.

மீண்டும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்குதாரர்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்களிடம் நெருக்கடியின் போது நாம் எப்படி தீர்வைக் காணலாம்,  மாற்றீடுகளை எப்படி கொடுக்கலாம், என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்த வேண்டி இருந்தது.

கடந்த ஆண்டை விட அந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஒப்பீட்டளவில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். நீண்ட மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் தேவை என எமது நிலை தொடர்ந்தது. தற்போது பொருளாதாரம், அரசியல் சூழ்நிலை, சமூக கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் சீரான கட்டத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. இதற்காக நாம் கடந்த காலத்தில் இருந்து மீண்டு வர எவ்வாறு கவனமாக செயற்பட்டோமோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்