இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வவுனியாவில் நடவடிக்கைகள்! சத்தியமூர்த்தி அதிரடி நடவடிக்கை
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் முறைகேடான முறையில் அதாவது உரிய தகுதி பெறாத வைத்தியர்கள் சிலர் தனியார் வைத்தியசாலைகளையும், மருந்தகங்களையும் நடத்துவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டி அதனை சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் பணிப்புக்கு அமைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து வவுனியா, நெளுக்குளம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிகையின் போது ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் தனியார் வைத்தியசாலையின் பேரில் ஆங்கில மருந்துகளை விநியோகம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அங்கிருந்த பெருந்தொகையான மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிதம்பரபுரம் பகுதியில் உள்ள ஒருவர் ஆயுர்வேத வைத்தியர் என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் இருந்த ஆயுர்வேத மற்றும் ஆங்கில மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் ஆயுர்வேத வைத்தியர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தனியார் வைத்தியசாலைகளை நடத்திய உரிமையாளர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இரு நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். (
கருத்துக்களேதுமில்லை