வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் யானை தாக்கி மட்டக்களப்பில் பரிதாபகர சாவு!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களில் ஒருவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்துக்குள் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.

இதனால் அந்த கிராம மக்கள் யானைகளை கட்டுப்படுத்துவதற்காக வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்துக்கு அறிவிக்க, குறித்த இடத்துக்கு விரைந்த திணைக்கள  உத்தியோகத்தர்கள் யானைகளை கட்டுப்படுத்தி விரட்ட முயன்றுள்ளனர்.

அவ்வேளை கட்டுப்படாத காட்டு யானையொன்று அந்த உத்தியோகத்தர்களை எதிர்த்து தாக்கியுள்ளது.

இதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளி காரியாலய உத்தியோகத்தர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நுவரெலியாவைச் சேர்ந்த 30 வயதான செல்வராஜ் சிறிதரன் என்பவரே இதன்போது உயிரிழந்தவர் ஆவார். அத்தோடு, மற்றுமொரு உத்தியோகத்தர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் மிக நீண்ட காலமாகவே காட்டு யானைகளின் தாக்குதல்களும் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதோடு, காட்டு யானைகளால் அப்பகுதி மக்களின் வீடுகள், பயிரினங்கள் சேதமடைந்தது மட்டுமன்றி, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்