30 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜனநாயகப் போராட்டம் வலிசுமந்த மக்களுக்கு துணையாக வருமாறு அழைப்பு! முன்னாள் எம்.பி. ஸ்ரீநேசன் கோரிக்கை

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் உண்மைகள் கண்டறியப்படவில்லை மாறாக, காணாமல் ஆக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலையே இலங்கையில் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீPநேசன் குற்றச்சாட்டியுள்ளதுடன் தமிழ் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் 30.08.2023 அன்று உலகளாவிய ரீதியில் அனுட்டிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் மு.ப 9,00 மணியளவில் மட்டக்களப்பிலும் அது தொடர்பான ஜனநாயக ரீதியான போராட்டம், கல்லடிப் பாலத்தில் இருந்து,காந்திப்பூங்கா வரை நடைபவனியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் உண்மைகள் கண்டறியப்படவில்லை. நீதி வழங்கப்படவில்லை. இனியும் காணாமல் ஆக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை.

மாறாக,காணாமல் ஆக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளதோ என்று மக்கள் ஐயப்படுகின்றனர். அந்தக் குற்றவாளிகளுக்குப் பதவிகள், பதவியுயர்வுகள் வழங்கி கௌரவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

எனவே நீதிக்கான உள்நாட்டுப் பொறிமுறையைத் தமிழ் மக்கள் நம்ப முடியாத நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறையை எமது உறவுகள் கோர வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நீதியான உரிமைப்போராட்டத்தில் வலிசுமந்த மக்கள் அனைவரும் கலந்து கொள்வோம். பார்வையாளர்களாக அல்லாமல்,பங்காளிகளாகி ஜனநாயக ரீதியாகப் போராட வாருங்கள் என்று அன்பாக அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்