புலம்பெயர்வு வள நிலையம் அமைப்பதற்கு நியூஸிலாந்தின் முழுமையான ஒத்துழைப்பு! 3 ஆண்டுகள் வரை நிதி உதவி வழங்கவும் இணக்கம்

புலம்பெயர்வு வள மத்திய நிலையம்  ஒன்றை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக  நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராலயம்,  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன்,  அதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது.

இதுதொடர்பான தீர்மானமிக்க அமைச்சருக்கும் ,நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர் உயர்ஸ்தானிகர் அன்ரூ ட்ரவலருக்கும் இடையில் கலந்துரையாடல்  தொழில் அமைச்சில்  இடம்பெற்றது.

இந்த நிலையத்தை அமைப்பது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சால்,  சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

இந்த நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மூன்று வருட காலத்துக்கு நிதி உதவி வழங்கவும் நியூஸிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில்  பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் இதன் ஊடாக செயற்படுத்தப்படுவதுடன்  மனித கடத்தல் மற்றும் முறையற்ற புலம்பெயர்வுகளைத் தடுப்பதில் இந்த நிலையத்தின் ஊடாக  முக்கிய பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும்.

இந்த வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் படிப்படியாக முன்னெடுப்பதற்கு  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக நியூஸிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்