கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ரணில் முயற்சி எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆளுந்தரப்பின் எம்.பி.க்களை அடுத்த வாரம் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருக்கின்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றாலும் , தோற்கடிக்கப்பட்டாலும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் யார் என்பது அந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாமல் ராஜபக்ஷவும் திஸ்ஸ குட்டியாராச்சியும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று கோருகின்றனர். எதிர்க்கட்சியினரைப் போன்று அவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

மேடைகளில் பொய் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு உண்மையில் தேர்தல் வேண்டுமென்றால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியிடம் சென்று நேரடியாகக் கூற முடியுமல்லவா?

தேர்தலின் பின்னர் ஏற்படப் போகும் விளைவுகளை அறிந்தா அல்லது அறியாமலா அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றார் என்பது விளங்கவில்லை.

எதிர்காலத்தை பற்றி மாத்திரமின்றி , நிகழ்காலம் குறித்தும் நம்பிக்கை இன்றியே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கு தேர்தலையே கோருகின்றனர்.

நாட்டுக்காக உழைத்து ஓய்வு பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்களின் வட்டி வீதம் குறித்து அவதானம் செலுத்துமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்துகின்றோம்.

மக்கள் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஆளுந்தரப்பின் எம்.பி.க்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்து மக்கள் கொல்வதற்கு உதவுபவர்கள் யார் என்பதை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது புரிந்துகொள்ளலாம். நாட்டு மக்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்துகின்றோம்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நாம் தோற்றாலும் , வெற்றி பெற்றாலும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் யார் என்பதை எம்மால் வெளிக் கொண்டு வர முடியும்.

பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படாவிட்டாலும் , மக்கள் மனதுக்குள் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தலின் போது அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.