மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர்களின் கடிதத்துக்கு பதில் எங்கே ? – உரிய பதிலைக்கோரி வெளிவிவகார அமைச்சுக்கு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மகஜர்

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களால் நால்வரால் எழுதப்பட்ட கடிதத்துக்கு உரியவாறு பதிலளிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இம்முறை ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில்  புதன்கிழமை (30) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் அனுட்டிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வியாழக்கிழமை (31) கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் இருவேறு மகஜர்களைக் கையளித்தது.

இம்மகஜர்கள் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோவினால் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

அதன்படி வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்ட மகஜரில், மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களால் நால்வரால் எழுதப்பட்ட கடிதத்துக்குப் பதில் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இயங்கிவருவதுடன் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை வலியுறுத்தும் அமைப்பு என்ற ரீதியில் அக்கடிதம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றோம்’ என்று அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் காணாமல்போனோர் பற்றிய அலுவலத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான 6 வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காணாமல்போனோர் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதை முன்னிறுத்தி உரியவாறான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தல், வட- கிழக்கில் காணாமல்போனோரின் உறவுகளால் அளிக்கப்பட்ட 5 முறைப்பாடுகள் மற்றும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் அளிக்கப்பட்ட 6 முறைப்பாடுகள் உள்ளடங்கலாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவுசெய்தல், இராணுவத்தினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான செயற்திறன்மிக்க இழப்பீடு வழங்கல் செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தல், இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு மறுக்கும் குடும்ப உறுப்பினர்கள்மீது அழுத்தம் பிரயோகிப்பதைத் தவிர்த்தல், கடந்தகால ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்தல் ஆகியவையே அவ்வேண்டுகோள்களாகும்.

மேலும் மாத்தளை மாவட்டம் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வெவ்வேறுபட்ட காலப்பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இவ்வமைச்சுக்களுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டத்திலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்