காத்தான்குடி பூர்வீக நூதன சாலை திருத்தவேலைகளுக்கு மூடப்படுகிறது!

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை திருத்த வேலைகளுக்காக மூடப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர்.

இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், வழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் இந்த நூதனசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், வியாபார முறைகள், புராதன பள்ளிவாசல்கள், முதலாவது ‘ரி.எஸ்’ செய்த இடம் உட்பட பல நூறு இஸ்லாமிய கலாசாரங்கள் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.

பல பழைமையான பொருள்களையும் சில செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி உருவமைப்புகளையும் காணக்கூடிய இந்த நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் தற்போது சேதமடைந்துள்ளன.

நூதனசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கூட எந்தவொரு வழிகாட்டலுமின்றி தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றனர் எனக்கூறப்படுகிறது.

சில காட்சியறைகளில் ஒட்டடைகள் காணப்படுகின்றன. சில பொருள்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த நிலையத்தில் அதிகளவான குப்பைகள் சிதறி காணப்படுவதோடு, அங்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்கான உத்தியோகத்தர்கள் குறைவாக உள்ளனர்.

அவ்வாறு வழிநடத்துநர்கள் இல்லாத காரணத்தால் சில பார்வையாளர்கள் செல்பி எடுப்பதற்காக அரிதான சில பொருள்களை தொடுவதாலும், விலைமதிப்பற்ற அச்சான்றுப் பொருள்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள இந்த நூதனசாலையை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தூய்மையின்றி, சேதமடைந்து காணப்படும் நூதனசாலையின் பகுதிகளை திருத்தியமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதால் எதிர்வரும் செப்ரெம்பர் 4ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை 10 நாள்களுக்கு நூதனசாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைக் கூறும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் கலாசார மரபுரிமைகள் அமைச்சின் அனுசரணையுடன், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள வழிகாட்டலில், பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகள் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பூர்வீக நூதனசாலை கடந்த 2015 ஏப்ரல் 15 ஆம் திகதி காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்