ரணிலுடன் ஒன்றிணையும் நிலைப்பாட்டில் மைத்திரி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளார்.

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் தரப்பினர் எந்நிலையிலும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மஹகரம பகுதியில் வெள்ளிக்கிழமை ( 31) கட்சி கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை கிடையாது. கட்சி இல்லாதொழிந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகிறார்.

பாராளுமன்றத்தில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணியமைத்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன என்பது ஒரு கட்சியா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பினார்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்தக்கு தெரிவானதை அவரும்,சுதந்திரக் கட்சியினரும் மறந்து விட்டார்கள்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து அடுத்தக்கட்ட அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

சுதந்திரக் கட்சியினருடன் கூட்டணி அமைக்கும் தரப்பினர் எந்நிலையிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வெகுவிரைவில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளோம். கட்சியின் செயற்பாடுகளுடன் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.