ஊழல்டீலை 24 மணித்தியாலத்துக்குள் நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர்

பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இருப்பினும் ஆரம்பித்த 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் இருக்கும் ஊழல் மிக்க டீலை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே ஸ்ரீ தம்மரத்தன தேரர் தெரிவித்தார்.

மிஹிந்தலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு –

பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து எமது நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தனர். நிவாரணம் தருவதாக கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இருப்பினும் ஆரம்பித்த 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை வளர்த்துவிடவே அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று நிறுவனங்களுடன் டீல் வைத்த பிறகு அவர்கள் தமது செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்கிறார்கள்.

‘தேவையான அளவுக்கு விலையை அதிகரித்து தருகிறோம். நீங்கள் விரும்பிய விலைக்கு விற்பனை செய்து, அதில் எமக்கு பாதியை வழங்குங்கள்’ என அவர்கள் கூறியுள்ளனர். இந்த சூட்சுமத்தை 24 மணித்தியாலங்களுக்குள் புரிந்துகொண்டுள்ளோம். நாட்டு மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

இது பாரியதொரு ஊழல் மிக்க டீல் ஆகும். பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் இருந்தாலும் சில நிறுவனங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் உறவினர்கள், நண்பர்களின் பெயர்களில் இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கப்பெறுகிறது. அது கறுப்பு பணமாகும்.

மக்களுக்கு என்ன நடந்தாலும், அது தொடர்பில் அவர்கள் கவலை கொள்வதில்லை. அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும். நாடாளுமன்றத்தில் இருக்கும் இந்த 225 பேரும் நாட்டு மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.

ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு நாட்டு மக்களைக் கொண்டு வந்தவர்களே இவர்கள் அனைவரும் என்பதை புரிந்துகொண்டவர்கள், அவர்களின் அரசியல் மேடைகளுக்கு செல்லமாட்டார்கள். இவ்வாறு செல்பவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அவர்களும் ஒன்று; இவர்களும் ஒன்று என்பதை புரிந்துகொள்ளுங்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.