பொறுப்பற்ற வகையில் செயற்படும் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அமைச்சரவை அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் கொண்டு வருவோம். ஒருசில அமைச்சர்கள் பொறுப்புக்களை மறந்து எதிர்கால அரசியல் வலுப்படுத்திக் கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுவர்தன தெரிவித்தார்.

நாவல பகுதியில் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பொறுப்புக் கூற வேண்டியதில்லை.

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து,பிரேரணையை தோற்கடிப்போம்.

சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை முறையாக செயற்படுத்தியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களில் ஒரு சிலர் ஏதோ உயர் இடத்தில் இருப்பதை போல் எண்ணிக்கொண்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக செயற்படுத்தாமல் தங்களின் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்.

பொறுப்பற்ற வகையில் செயற்படும் அமைச்சர்களுக்கு எதிராக நாங்களே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்.

ஆகவே அமைச்சர்கள் முறையாக செயற்பட வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறோம்.இது தற்காலிக அரசாங்கமே தவிர நிலையான அரசாங்கமல்ல என்பதை அமைச்சரவை அமைச்சர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.