கண்டறியப்பட்ட 15 பேர் பற்றிய விவரங்களை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப ஏற்பாடு! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவிப்பு

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட 15 பேர் தொடர்பான விவரங்களை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களுக்கும் அனுப்பிவைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

2000 – 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 15 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவால் அறிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட 15 பேரில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் புலம்பெயர் நாடுகளில் வசித்துகின்றனர் எனவும் குறிப்பிட்ட அவர், எஞ்சிய 11 பேரும் வயோதிபம் மற்றும் பல்வேறு நோய்நிலைமைகளின் விளைவாக உள்நாட்டில் வௌ;வேறு பகுதிகளில் வசித்துவந்தனர் எனவும், சிலர் வெளிநாடுகளுக்குச்சென்று திரும்பியதாகவும் விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி தற்போது அவர்கள் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி நீண்டகாலமாகப் போராடிவரும் உறவுகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் இந்த அறிவிப்புக் குறித்து பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக 15 பேர் கண்டறியப்பட்டிருப்பதாகக் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் கூறுவதைத் தாம் எவ்வாறு நம்புவது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், இவ்விடயம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடம் வினவியபோது, மேற்குறிப்பிட்ட 15 பேர் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களுக்கும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதில் கிடைத்தது.

எனவே அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புக்களால் சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறு கண்டறியப்பட்டோர் தொடர்பான விவரங்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புக்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

பின்னர் அந்த அமைப்புக்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்டோர் தொடர்பான முறைபாடுகளையும், கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தம்மிடம் அளித்த முறைப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்கி, அவை ஒரே முறைப்பாடுகளா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, கண்டறியப்பட்ட நபர் தொடர்பான உண்மைத்தன்மையையும் ஆராய்ந்து, அறிக்கையொன்றை வெளியிடும். எனவே மேற்கூறப்பட்ட 15 விவகாரத்திலும் இச்செயன்முறை உரியவாறு பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.