12 எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபர் கைது : 9 சிலிண்டர்கள் மீட்பு – காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை சூட்சுமமான முறையில் திருடிய சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிவாயு முகவர் நிலையத்தின் பின்புற மதிலின் மேல் ஏறி, கைகளால் குறித்த சந்தேக நபர் 12 எரிவாயு சிலிண்டர்களை திருடியுள்ளார்.

திருடிய கொள்கலன்களை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தபோதே அவர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேக நபரிடமிருந்து 9 சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 3 சிலிண்டர்களையும் அவர் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.